Sunday, January 15, 2017


இழப்பதும் இன்பமே !

சூரியனைக்
காதலித்ததாலோ
என்னவோ
அடையாளம்
இழந்தது -
ஆனந்தப்பெருக்கில்
பனிப்பாறை

காது கொடு 

கனத்த
இதயத்தோடு மேகம்
அன்போடு
காற்று தழுவியதும்,
கொட்டித்தீர்த்தது
மழையாக

வகுப்பறை

நீ
ஒரு வகுப்பெடுத்தாலே
எனக்கு
கற்றலில்
மறு பிறப்பெடுத்தல்
நீ
ஆசிரியர் அல்ல
போதி(க்கும்) மரம்
உன் சுவாசத்தில்
சறுகாய்
சங்கீதத்தோடு
உதிரவே
என் வகுப்பறைத்  தவம்

கற்றுக்கொள் 

விழுந்து கிடக்கிறது
மேகம் -
தண்ணீராக.
எழுந்து ஓடுகிறது
தண்ணீர் -
மேகமாக.
நாம் !
நதிபோல நடப்போமா
விழுந்தாலும் எழுந்தாலும் ? !!!

மகிழ்ச்சியோடு போ

இலையுதிர்காலத்தில்
மட்டுமல்ல
சருகுகளின் சங்கீதம் -
மரம்
வேர் அற்று
விழும்போதும்

இன்று போய் .....

அழுக்கு வேட்டியுடன்
அப்பழுக்கு இல்லா
அப்பா
முதுகெலும்பு
இல்லாத என்னை
அசீர்வதித்து
அனுப்பினார்-
முதியோர்
இல்லத்திலிருந்து

தில்லாலங்கடியோவ்......!!!

குருவையே
சாகும்படி செய்யும்
குறுவை
சாகுபடிக்காரர்கள் -
அரசியல் வாதிகள்

கவனி  
ஆமையின்
தத்துவம் -
'வெற்றிபெற முயல்'

நடனம் 

காற்று
கிசு கிசுத்ததும்
அபிநயம் பிடித்தன
இலைகள் -
'ஆடல் கலையே
தேவன் தந்ததோ'?

கவனி? கேள் ?

அப்பா
சொல்வதைஎல்லாம்
கேட்டுக்கொண்டிருந்தான் (Hearing)
மகன் -
மனைவி
கவனித்துகொண்டு (Listening)
இருந்ததால்


No comments:

Post a Comment